| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

திமுக-காங்கிரஸ்...! நம்பிக்கை இல்லை...! தமிழிசை அதிரடி கமெண்ட்...!

by Vignesh Perumal on | 2026-01-18 02:33 PM

Share:


திமுக-காங்கிரஸ்...! நம்பிக்கை இல்லை...! தமிழிசை அதிரடி கமெண்ட்...!

முன்னாள் பாஜக மாநில தலைவரும், ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

சமீபகாலமாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி தமிழிசை கூறியதாவது: “திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தற்போது துளியும் நம்பிக்கை இல்லை. இந்தச் சூழலில் வரும் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தொடருமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. 

கடந்த 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை திமுக முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள்.”

கொள்கை ரீதியாக இணையாமல், வெறும் அதிகாரத்திற்காக மட்டுமே இந்தத் தலைவர்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக அவர் சாடினார்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழப்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

"ஜல்லிக்கட்டு என்பது நம் பாரம்பரியம், அதை நாம் போற்றுகிறோம். ஆனால், போட்டிகளின் போது ஏற்படும் மரணங்களைத் தடுக்கத் தகுந்த முன்னேற்பாடுகளைத் தமிழக அரசு செய்யவில்லை. உயிரிழப்புகள் நேரிடுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழுவினரின் தயார் நிலை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்."

ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்ற நிகழ்வாக இருப்பதால், அதற்கேற்ற மருத்துவ வசதிகள் அந்தப் பகுதியில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

"அலங்காநல்லூரில் ஒரு உலகத்தரத்திலான அதிநவீன மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று நான் பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை."

போட்டிகளின் போது காயமடைபவர்களுக்கு உடனடி மற்றும் உயர்தர சிகிச்சை கிடைக்க அந்தப் பகுதியிலேயே வசதிகள் இருக்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் மாறி வரும் நிலையில், தமிழிசையின் இந்த 'திமுக-காங்கிரஸ்' விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, கார்த்தி சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் 'ஆட்சியில் பங்கு' குறித்துப் பேசி வரும் சூழலில், தமிழிசை இதனை 'நம்பிக்கையற்ற கூட்டணி' எனச் சாடியுள்ளார்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment