by Vignesh Perumal on | 2026-01-17 04:40 PM
தமிழகத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘அல்மாண்ட் கிட்’ என்ற சளி மற்றும் இருமல் மருந்திற்குத் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உடனடித் தடை விதித்துள்ளது. இந்த மருந்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், ஹாஜிப்பூரைச் சேர்ந்த ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ என்ற நிறுவனம் இந்த ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பைத் தயாரித்து வருகிறது. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த மருந்தில் எத்திலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கொல்கத்தா மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்களில் இனிப்புச் சுவைக்காகவும், கரைப்பானாகவும் கிளிசரின் அல்லது புரோப்பிலீன் கிளைகால் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், செலவைக் குறைப்பதற்காகச் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 'எத்திலீன் கிளைகால்' என்ற நச்சுப் பொருளைக் கலக்கின்றன.
இதை உட்கொள்ளும் குழந்தைகளுக்குச் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் மூளை, நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழவும் வாய்ப்புள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு 'கோல்ட்ரிஃப்' என்ற மற்றொரு இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் 22-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த புதிய நச்சு மருந்து கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த மருந்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள மருந்துக் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் உள்ள மருந்துப் பெட்டிகளைச் சோதித்து, அதில் ‘Almont-kid’ என்ற பெயரில் மருந்து இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.
குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு இருமல் மருந்தையும் சுயமாக வாங்கித் தர வேண்டாம்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!