| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு..! 48 பேர் காயம்...! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

by Vignesh Perumal on | 2026-01-15 04:05 PM

Share:


ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு..! 48 பேர் காயம்...! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. சீறிப்பாயும் காளைகளும், அவற்றை அடக்கத் துடிக்கும் வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டி வரும் நிலையில், போட்டியின் 7-வது சுற்று முடிவில் காயமடைந்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

7-வது சுற்று நிறைவடைந்த நிலையில், காளைகள் முட்டியதிலும், தடுப்புக் கட்டைகளில் மோதியதிலும் மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக, மாடுபிடி வீரர்கள் 24 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 7 பேர் என மொத்தம் 48 பேர் காயமுற்றனர்.

காயமடைந்த 48 பேருக்கும் வாடிவாசல் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்பட்டன. இதில் பலத்த காயமடைந்த 5 நபர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று காலை முதலே மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல காளைகளை வீரர்கள் லாவகமாகப் பிடித்து பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடி, அதன் உரிமையாளர்களுக்குத் தங்கக் காசுகள், பீரோ, கட்டில் போன்ற பரிசுகளை ஈட்டித் தந்தன.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, மதுரை மாநகரக் காவல் ஆணையர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

போட்டி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்னும் எத்தனை வீரர்கள் சிறந்த முறையில் காளைகளை அடக்குகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment