| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை..! வியாபாரிகள் மகிழ்ச்சி...!

by Vignesh Perumal on | 2026-01-13 06:48 PM

Share:


ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை..! வியாபாரிகள் மகிழ்ச்சி...!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென்தமிழகத்தின் மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. குறிப்பாக, பொங்கல் முடிந்து வரும் நாட்களில் அசைவ விருந்து என்பது தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம். இதற்காக ஆடுகளை வாங்குவதற்குத் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் மேலப்பாளையம் சந்தையில் குவிந்தனர்.

சந்தைக்குக் கொண்டு வரப்பட்ட ஆடுகளின் ஆரோக்கியம் மற்றும் எடையைப் பொறுத்து விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச விலை ரூ. 5,000, அதிகபட்ச விலை ரூ. 50,000 (கிடா ஆடுகள்) விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக, கட்டுமஸ்தான மற்றும் நல்ல எடையுள்ள ஆடுகளை வாங்குவதில் மக்களிடையே கடும் போட்டி நிலவியது. சிலர் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்காகவும், சிலர் குடும்ப விருந்துக்காகவும் போட்டிப் போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

"வழக்கமான நாட்களை விட பொங்கல் சமயத்தில் விற்பனை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வரத்து அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப தேவையும் இருந்ததால் நல்ல விலை கிடைத்துள்ளது" என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடுகள் மட்டுமின்றி மாடுகளின் விற்பனையும் ஓரளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியதால் மேலப்பாளையம் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.












நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment