by Vignesh Perumal on | 2026-01-13 12:49 PM
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் நிலவி வந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொருட்களை வழங்க கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் இந்தப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசைப் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் உள்ள 'பயோமெட்ரிக்' கருவியில் கைரேகை வைப்பது அவசியமாகும். ஆனால், கடந்த சில நாட்களாக முதியவர்கள் மற்றும் கடின உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு வயது முதிர்வு காரணமாக கைரேகை சரியாகப் பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலமுறை முயற்சி செய்தும் கைரேகை பொருந்தாததால், முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும், சில இடங்களில் பரிசுத் தொகுப்பு பெறுவதில் தாமதமும் ஏற்பட்டது.
இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, கூட்டுறவுத்துறை தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கைரேகை பதிவு ஆகாத முதியவர்களுக்கு, ரேஷன் கடைகளில் உள்ள கண் கருவிழி (Iris) ஸ்கேனர் கருவி மூலம் அடையாளத்தை உறுதி செய்து உடனடியாகப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும். ஒருவேளை கண் கருவிழி அடையாளமும் தோல்வியுற்றால், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது கைரேகையைப் பயன்படுத்தவோ அல்லது உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்குப் பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த துரித நடவடிக்கையால் முதியவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். "கைரேகை விழவில்லை என்று திருப்பி அனுப்பாமல், மாற்று முறையில் பொருட்களை வழங்க உத்தரவிட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இந்தப் பொங்கல் பரிசு விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் நாட்களிலும் தடையின்றி பொருட்களை வழங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!