by Vignesh Perumal on | 2026-01-13 12:33 PM
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு வார்டு அருகே ரவுடி ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகக் கூறி 3 பெண் போலீசார் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆதி (20) என்ற சரித்திரப் பதிவேடு ரவுடி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழி சுசித்ராவைப் பார்க்க வந்துள்ளார். நேற்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், மருத்துவமனை வளாகத்தில் அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய கும்பல் ஆதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவத்தின்போது மருத்துவமனை அவுட்போஸ்ட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த 3 பெண் போலீசார் மற்றும் ஒரு காவலர் என மொத்தம் 4 பேர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் உதவி ஆணையர் துரை ஆகியோருக்கு, பாதுகாப்புப் பணியை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரம் மற்றும் பழைய பகை காரணமாக ஆதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சுசித்ராவின் கணவர் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சூர்யா உள்ளிட்ட 3 பேரைத் தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் பிற முக்கிய அரசு மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்குள் வரும் மர்ம நபர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!