by Vignesh Perumal on | 2025-12-30 11:30 AM
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முட்டை மற்றும் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அரசின் நடவடிக்கையைக் கண்டித்து 1,500-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உணவின்றித் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆலப்புழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாத்துகள் மற்றும் கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாகத் தகழி, நெடுமுடி, செருதனா, கருவாட்டா உள்ளிட்ட 9 ஊராட்சிப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவாமல் தடுக்க, மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றியுள்ள 10 கி.மீ தொலைவிற்கு கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகளின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்கவோ, கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத் துறையினரின் ஆய்வுகள் மிகவும் கடுமையாக இருப்பதாகவும், ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (KHRA) விடுத்துள்ள அறிவிப்பில், "முன்கூட்டியே எச்சரிக்கையின்றி அதிகாரிகள் அராஜகமாகச் செயல்படுகின்றனர். பாதுகாக்கப்பட்ட உறைய வைக்கப்பட்ட (Frozen Meat) இறைச்சிக்கும் தடை விதிப்பது ஏற்புடையதல்ல" எனத் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இன்று (டிசம்பர் 30) முதல் காலவரையற்ற மூடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆலப்புழா ஒரு சர்வதேச சுற்றுலாத் தலம் என்பதால், தற்போது புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அங்கு குவிந்துள்ளனர்.
ஹவுஸ்போட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
"பறவைக் காய்ச்சல் பயம் ஒருபுறம் இருந்தாலும், அடிப்படை உணவிற்காகக் கூட வழியில்லாமல் அலைந்து வருகிறோம்" எனச் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுவரை ஆலப்புழாவில் மட்டும் சுமார் 28,500-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன (Culling). நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரச் சுகாதாரத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், ஹோட்டல் உரிமையாளர்களுடனான சமரசப் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!