by Vignesh Perumal on | 2025-12-28 06:53 PM
கோவை அருகே தமிழக - கேரள எல்லையில், இருசக்கர வாகனத்தில் ரகசிய அறை அமைத்து உரிய ஆவணங்களின்றி கடத்த முயன்ற ரூ. 56.50 லட்சம் ஹவாலா பணத்தைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லையான வேலந்தாவளம் அருகே உள்ள கந்தேகவுண்டன்சாவடி சோதனைச் சாவடியில், இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால், போலீசாரைக் கண்டதும் அந்த நபர் வாகனத்தை மின்னல் வேகத்தில் திருப்பித் தப்பிச் செல்ல முயன்றார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார், சினிமா பாணியில் அந்த வாகனத்தைச் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், போலீசார் அவர் கொண்டு வந்த வாகனத்தை அங்குலம் அங்குலமாகச் சோதனையிட்டனர். அப்போது, அந்த இருசக்கர வாகனத்தில் பணத்தைக் கடத்துவதற்காகவே மிக நேர்த்தியாகப் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.பெட்ரோல் டேங்கின் ஒரு பகுதியில் எரிபொருள் நிரப்பவும், மற்றொரு பகுதியில் பணத்தை மறைத்து வைக்கவும் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், இருக்கைக்கு (Seat) அடியிலும் பிரத்யேக ரகசிய அறை இருந்தது.அந்த அறைகளைத் திறந்து பார்த்த போலீசார், உள்ளே கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபீக் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த மொத்தம் ரூ. 56 லட்சத்து 50 ஆயிரம் பணத்திற்கு எந்தவிதமான முறையான ஆவணங்களும் இல்லை. கோவையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கேரளாவில் உள்ள ஒரு கும்பலிடம் ஒப்படைக்க அவர் திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் 'ஹவாலா' பணமாக இருக்கலாம் என்ற பலமான சந்தேகத்தின் அடிப்படையில், ஷபீக் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆகியவற்றை மேலதிக விசாரணைக்காகப் போலீசார் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்தப் பணம் யாருடையது? இதன் பின்னணியில் உள்ள ஹவாலா நெட்வொர்க் எது? கோவையில் யாரிடம் இருந்து இந்தப் பணம் கைமாறியது? என்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !