by Vignesh Perumal on | 2025-12-21 03:21 PM
திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று, கல்வி உட்கட்டமைப்பு மற்றும் விவசாய நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்கள் நெல்லை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, தென் மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மாணவிகளின் கல்வி புகலிடமாக விளங்கி வருகிறது.
இக்கல்லூரியில் தொலைதூர கிராமங்களில் இருந்து வந்து பயிலும் மாணவிகளின் வசதிக்காக, ரூ.11 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு தங்கும் விடுதி கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பான தங்குமிடம் உறுதி செய்யப்பட்டு, உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சேரன்மகாதேவி வட்டாரப் பகுதிகளில் உள்ள பாசனக் கட்டமைப்புகளைச் சீரமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன்படி, ரூ.4.01 கோடி செலவில் விவசாயிகள் அதிகம் பயன்பெறும் காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடை பகுதிகள் புனரமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கால்வாய்களில் தண்ணீர் தடையின்றிச் சென்று சேருவது உறுதி செய்யப்படுவதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பயனடையும்.
தெற்கு நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தொகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளைச் சீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வள்ளியூர் பெரியகுளம் மற்றும் அதற்கு நீர் ஆதாரமாக விளங்கும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை முழுமையாகப் புனரமைக்கப்படும்.
இப்பணிகள் நிறைவடையும் போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குத் தட்டுப்பாடற்ற நீர் விநியோகம் கிடைக்கும்.
நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தேவைகளான கல்வி மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சேரன்மகாதேவி மற்றும் வள்ளியூர் பகுதி விவசாயிகள் இத்திட்டங்கள் மூலம் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!