by Vignesh Perumal on | 2025-12-21 01:25 PM
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகன மேடையில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பராமரிப்பு பணிகளுக்காக தகன மேடை தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று (டிசம்பர் 20), சின்னமனூர் தலையாரி ராமசாமி தெருவைச் சேர்ந்த சீனியம்மாள் (98) என்ற மூதாட்டியின் உடல் தகனம் செய்வதற்காக நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் அங்கு வந்தனர்.
அப்போது, ஏற்கனவே எரியூட்டப்பட்ட சீனியம்மாளின் சடலம் முழுமையாக எரியாமல், அரைகுறையாக எரியூட்டப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு ராஜேஷின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவல் சீனியம்மாளின் உறவினர்களுக்குத் தெரியவரவே, அவர்கள் சம்பவ இடத்தில் திரண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
சின்னமனூர் நகராட்சி எரிவாயு தகன மேடை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்து வருகின்றன.
தகன மேடையை மேற்பார்வை செய்யும் தனியார் ஒப்பந்ததாரர் முறையாகப் பராமரிப்பு செய்வதில்லை. புகைக் கூண்டு மற்றும் உள் தகன மேடை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் உடல்கள் முறையாகத் தகனம் செய்யப்படுவதில்லை.
எரியூட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பைத் தணிக்க, நகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, "நவீன எரிவாயு தகன மேடையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதனைச் சீரமைக்கும் பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன. எனவே, இன்று (21.12.2025) முதல் 31.12.2025 வரை எரிவாயு தகன மேடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது."
தகன மேடை மூடப்பட்டுள்ள காலத்தில், பொது மக்கள் தங்கள் வீட்டு சடலங்களை எரியூட்ட மாற்று ஏற்பாடாக நத்தத்து மேடு முல்லைப் பெரியாற்று படுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சின்னமனூர் பகுதி பல்வேறு சமுதாய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையில், "பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு தகன மேடை மீண்டும் திறக்கப்படும்போது, அதனைத் தகுந்த மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். முறையான கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடல்களை கண்ணியமான முறையில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!