by Vignesh Perumal on | 2025-12-20 02:35 PM
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, கொடிமரத்தைப் புதுப்பிக்க 4 பேர் மலை ஏறியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுல்தான் சிக்கந்தர் பாஷா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா நாளை (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்த விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தர்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தைப் புதுப்பித்து, வர்ணம் பூசுவதற்காகத் தர்கா தரப்பில் 4 பேர் இன்று மலை மீது ஏறினர்.
தர்கா ஊழியர்கள் மலை ஏறியதைத் தடுத்த இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மலையின் புனிதத்தைக் காக்க வேண்டும் என்றும், அங்குப் புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய அனுமதி இல்லை என்றும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"மலையில் ஏறுவதற்கும், கொடிமரத்தைப் புதுப்பிப்பதற்கும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், தர்கா நிர்வாகத்தினருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழல் உருவானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மற்றும் தர்கா நிர்வாகிகளுடன் உதவி ஆணையர் சசி பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். நாளை கொடியேற்ற விழா நடைபெற உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கத் திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தலையீட்டைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், நாளை நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!