| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

விஜய்க்கு எதிராக 'பரபரப்பு' போஸ்டர்கள்...! துயரத்தைச் சுட்டிக்காட்டி காரசாரக் கேள்விகள்..!

by Vignesh Perumal on | 2025-12-18 11:23 AM

Share:


விஜய்க்கு எதிராக 'பரபரப்பு' போஸ்டர்கள்...! துயரத்தைச் சுட்டிக்காட்டி காரசாரக் கேள்விகள்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் வருகையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், கடந்த செப்டம்பர் மாதம் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. "பக்கத்துல இருக்கிற கரூருக்குப் போய் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க மனமில்லாத விஜய், பட ஆடியோ லாஞ்சிற்காக (ஜன நாயகன்) மலேசியாவுக்குப் போவது நியாயமா?" என்ற வாசகம் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது.

விஜய்யின் வசனமே அவருக்கு எதிராக விஜய் அரசியல் மேடைகளில் பயன்படுத்திய "What bro, it's very wrong bro" என்ற வசனத்தையே பயன்படுத்தி, "ஈரோடு வரை வந்தவருக்குக் கரூருக்குப் போக நேரமில்லையா? What bro, it's very wrong bro!" என்று கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர்களில் எந்தக் கட்சியின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ இடம்பெறவில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட அரசியல் எதிர்ப்பு என தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போஸ்டர் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

பாதுகாப்பைக் கருதி காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 ஆம்புலன்ஸ்கள், 70-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது என்பதால், அவரது பேச்சு எதை நோக்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டு வரும் நிலையில், மறுபுறம் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ள இந்த எதிர்ப்புப் போஸ்டர்கள் ஈரோட்டில் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளன.

தவெக நிர்வாகிகள் இந்தப் போஸ்டர்களைப் பல்வேறு இடங்களில் கிழித்து அகற்றி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சிறு சிறு வாக்குவாதங்களும் நிலவி வருகின்றன.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment