| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

பள்ளிச் சுவர் இடிந்து மாணவன் பலி..! தலைமை ஆசிரியர் உட்பட 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு...!

by Vignesh Perumal on | 2025-12-17 11:30 AM

Share:


பள்ளிச் சுவர் இடிந்து மாணவன் பலி..! தலைமை ஆசிரியர் உட்பட 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு...!

ஆர்.கே.பேட்டை அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்த மோகித் என்ற மாணவன், மதிய உணவு சாப்பிடுவதற்காகப் பள்ளியின் நடைமேடையில் அமர்ந்திருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாகப் பள்ளியின் பக்கவாட்டு கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து மாணவன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த மாணவன் மோகித், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், பணியில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி மூன்று முக்கிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது அலட்சியத்தால் ஏற்படும் மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முறையான பராமரிப்பு இன்றிச் சுவர் பலவீனமாக இருந்ததை உணர்ந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்து அபாய நிலையில் இருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், பள்ளிக்கல்வித்துறையிடமும் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்வித்துறையின் இந்த அலட்சியமே ஒரு சிறுவனின் உயிரைப் பறித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், மற்ற அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment