by Vignesh Perumal on | 2025-09-28 02:25 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதற்கும், உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் உள்ள முக்கியக் காரணங்களை காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த முக்கியக் காரணங்கள், அதாவது விஜய் நண்பகல் 12.45 மணிக்கு கரூரில் பேசுவார் என்று த.வெ.க. சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் சுமார் 5 மணி நேரம் தாமதமாகத்தான் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார். இந்த நீண்ட காத்திருப்பு பொதுமக்களைச் சோர்வடையச் செய்தது.
விஜய், தான் வந்த பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். திருக்காம்புலியூர் சந்திப்பைக் கடக்கும்போது, திடீரெனப் பேருந்தில் லைட்டுகளை அணைத்துவிட்டு உள்ளே சென்றார். இதன் காரணமாக, சாலை நெடுகிலும் விஜய்யைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்கள், "கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும்" என்று நினைத்து, அனைவரும் ஒரே நேரத்தில் மேடைப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இதுவே நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையில், கூட்டம் நடக்கும் இடத்தில் சுமார் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டது தெரியவந்துள்ளது. இந்த அதிகப்படியான கூட்டம் சூழலைச் சற்றும் கட்டுக்குள் இல்லாமல் ஆக்கியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்சியிலிருந்து போதிய தன்னார்வலர்கள் இல்லை.
காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்களுக்குத் தேவையான குடிநீர், மருந்துப் பொருட்கள் அல்லது மருத்துவக் குழு எதுவும் மேடை அமைந்த இடத்தில் தயார் நிலையில் இல்லை. காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், நெரிசல் ஏற்பட்டபோது நீரின்றித் தவித்ததோடு, மருத்துவ உதவியும் கிடைக்காமல் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முழு விவரங்களும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு.....
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!