| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

நூற்றாண்டு கால ரயில்பாதை கோரிக்கை...! எம்பி வலியுறுத்தல்..!

by Vignesh Perumal on | 2025-07-14 11:44 AM

Share:


நூற்றாண்டு கால ரயில்பாதை கோரிக்கை...! எம்பி வலியுறுத்தல்..!

திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான ரயில்பாதை திட்டம், தென்மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கோரிக்கையாக உள்ளதாகவும், இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் - சபரிமலை ரயில்பாதை திட்டம், தற்போதைய கோரிக்கை அல்ல. இது, 1910 ஆம் ஆண்டுக்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கொடைரோடு முதல் உத்தமபாளையம் வரை ரயில்வே திட்டத்திற்காக சர்வே செய்யப்பட்டதற்கான கற்கள் இன்றளவும் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் சுட்டிக்காட்டினார். இது, இத்திட்டத்திற்கான நீண்டகால தேவையையும், சாத்தியக்கூறுகளையும் அப்போதே உணர்த்தியிருப்பதைக் காட்டுகிறது என்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ், நாடாளுமன்றத்தில் சபரிமலை ரயில்வே திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், "திண்டுக்கல் முதல் தேனி வழியாக குமுளி வரையிலான ரயில்வே திட்ட ஆய்வுப் பணி 2014 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான 201 கிலோமீட்டர் அகல ரயில்வே திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஒன்றிய அரசு தனது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான அகல ரயில் பாதை சர்வே பணிக்காக 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது என்பதையும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.

நூற்றாண்டு காலமாக சர்வே செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த ரயில்வே திட்டம், தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவாகும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென்மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும், இப்பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

எனவே, நூற்றாண்டு காலத்திற்கு முன்பு சர்வே செய்யப்பட்டு இன்று வரையில் நிறைவேற்றப்படாத இந்த தென்மாவட்ட மக்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி, திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று தோழர். ஆர். சச்சிதானந்தம் வலுவாக வலியுறுத்தியுள்ளார்.







நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment