by Vignesh Perumal on | 2025-07-01 01:09 PM
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, காவலர்கள் லஞ்சம் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் உள்ள நிலையில், அவற்றின் மீதும் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தீர்களா என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தார். அவரது மரணம் காவல்துறையினரின் தாக்குதலால் ஏற்பட்டது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 18 வெளிப்புற காயங்கள் மற்றும் பல உள் காயங்கள் இருப்பதும், இவை அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 காவலர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
அஜித்குமார் ஒரு சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் என்றும், அவர் என்ன தீவிரவாதியா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவலர்கள் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம் என்றும், அவ்வாறு இல்லாமல் சாதாரண நபரை ஏன் கடுமையாக தாக்கினார்கள் என்றும் நீதிபதிகள் வினவினர். நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாதது ஏன் என்றும், யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர் என்றும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறையின் விரைவான நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், "போலீசார் லஞ்சம் வாங்குவது போல ஏராளமான வீடியோக்கள் உள்ளன. அவற்றின் மீதும் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டீர்களா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியது மிக முக்கியமானது. இது, காவல்துறையின் நடவடிக்கைகளில் உள்ள பாரபட்சத்தை சுட்டிக்காட்டும் விதமாக இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரின் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!