by Vignesh Perumal on | 2025-07-01 12:12 PM
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஏசுராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறப்படும் புகார்களின் அடிப்படையில், இன்று (ஜூலை 1) அவரது அரசு குடியிருப்பு மற்றும் சொந்த ஊர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ஏசுராஜ் மீது, அவரது வருமானத்திற்கு மீறி சொத்துக்கள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசியப் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார், இன்று காலை முதல் தேனியில் உள்ள ஏசுராஜின் அரசு குடியிருப்பில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், ஏசுராஜின் சொந்த ஊரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதால், முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில், கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், ஏசுராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த சோதனை தேனி நகராட்சி வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.