by Vignesh Perumal on | 2025-04-17 10:28 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வக்ப்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக இன்று (17.04.2025) இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். பழனி பெரிய பள்ளிவாசலில் இருந்து திரளான இஸ்லாமியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப்பு திருத்த சட்ட மசோதா இஸ்லாமியர்களின் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டினர். மேலும், இந்த சட்ட மசோதா இஸ்லாமியர்களின் மத உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி சென்றது. பேரணியின்போது, வக்பு சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இஸ்லாமியர்கள் ஏந்தியிருந்தனர்.
பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, பழனி நகரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பேரணி காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.