by Muthukamatchi on | 2025-04-16 05:28 PM
பணி செய்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக கிளைசெயலாளரின் மகன் மீது குற்றசாட்டுகாயம் அடைந்து 3நாட்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் ஆளும் கட்சி பிரமுகரின் மகன் என்பதால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
ஆளும் திமுக ஆட்சியில் அரசு ஊழியருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் மற்றும் அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 51 வயது தங்கராஜ்.இவர் கடமலைக்குண்டு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக கடந்த 20 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார்.இந்நிலையில் தங்கராசின் பணி எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மின்பழுது என அப்பகுதி திமுக கிளைச் செயலாளர் போஸ் என்பவர் தங்கராஜிற்கு அலைபேசி மூலம் தகவல் அளித்துள்ள நிலையில் அண்ணா நகர் வந்த தங்கராஜ் டிரான்ஸ்பார்மரில் மின்பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த திமுக கிளை செயலாளர் போஸ் என்பவரது மகன் ஆனந்தகுமார் என்பவர் மின் பழுதை சரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறி தங்கராசை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.இதையடுத்து மின்பழுதை சரி செய்துவிட்டு டிரான்ஸ்பார்மில் இருந்து கீழே இறங்கி வந்த தங்கராசை சரமாரியாக ஆனந்தகுமார் தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து படுகாயம் அடைந்த தங்கராசு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்து தங்கராஜ் கண்டமனூர் காவல் நிலையத்தில் மின்வாரிய ஊழியர்களுடன் சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புகார் அளித்தும் தற்போது வரை இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் தாக்குதல் நடத்திய ஆனந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டும் தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தார்.ஆளுங்கட்சியான திமுக கிளைச் செயலாளர் மகன் என்பதால் கண்டமனூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் பணி செய்து கொண்டு இருந்த அரசு ஊழியருக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்றும் போலீசாரிடம் புகார் செய்ததால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் உயிர் பயத்துடன் வேதனையும் தெரிவித்து மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து காத்திருக்கின்றனர் மின் ஊழியர் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி அம்சலட்சுமி.