by Vignesh Perumal on | 2025-04-16 02:50 PM
நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் அவரது மகள் கனிஷ்கா ஆகியோர், கனிஷ்காவின் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை நகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புகழ்பெற்ற இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கனிஷ்கா தனது புகாரில், திருமணத்திற்குப் பின்னர் தனது கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, புகழ்பெற்ற இருட்டுக்கடையை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று பல்ராம் சிங் வற்புறுத்துவதாகவும் கனிஷ்கா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் அவரது மகள் கனிஷ்கா ஆகியோர் இன்று (16.04.2025) நெல்லை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற வணிக நிறுவனத்தின் குடும்பத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த வரதட்சணை கொடுமை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.