by Vignesh Perumal on | 2025-04-16 01:45 PM
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நேற்று (15.04.2025) இரவு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வழக்கம்போல் தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது, மதுபோதையில் இருந்த இருவர், தாங்கள் வீட்டுக்குச் செல்வதற்காக ஒரு தனியார் பேருந்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்தை கண்டதும் அதிர்ச்சியடைந்த மற்ற ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட வசவப்பபுரம் சோதனைச் சாவடியில் இருந்த போலீசார், அந்த பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், பேருந்தை கடத்திய இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பிடிபட்ட இருவரையும் நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.