by Vignesh Perumal on | 2025-04-16 01:31 PM
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது நேற்று (15.04.2025) ட்ரோன் கேமரா பறக்கவிட்ட யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுமான் தரேஜா என்பவர் யூடியூபராக உள்ளார். இவர் நேற்று மாலை திருப்பதிக்கு வந்துள்ளார்.
அப்போது, ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஹரிநாம சங்கீர்த்தனை மண்டபத்தில் இருந்து அவர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு கோயிலின் சுற்றுப்புறத்தை வீடியோ பதிவு செய்துள்ளார். திருப்பதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடுவது சட்டப்படி குற்றமாகும்.
இதனை கண்ட விஜிலன்ஸ் எனப்படும் கோயில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அன்ஷுமான் தரேஜாவை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை திருப்பதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் ட்ரோன் பறக்கவிட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் சுற்றுலா விசாவில் வந்தாரா அல்லது வேறு ஏதும் நோக்கத்துடன் செயல்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட அன்ஷுமான் தரேஜாவின் ட்ரோன் கேமராவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பதிவான வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பதி போன்ற முக்கியமான மற்றும் புனித ஸ்தலங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.