| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?

by satheesh on | 2026-07-14 05:04 PM

Share:


நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்!  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?

நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்.. லஞ்ச ஒழிப்புத்துறை புதிய தலைவர் மகேஸ்வரி யார்?


 தமிழக காவல் துறையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரிவான லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் புதிய தலைவராக சி.மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் முக்கியமான சில காரணங்களுக்காக இவருக்கு இந்த பதவியை வழங்கி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருமான ஏ.அருண் ஐபிஎஸ்ஸுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்த நிலையில், இந்த அதிரடி மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தில் அரங்கேறிய பரபரப்பு : கடந்த மே மாத இறுதியில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ.அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஒரு முக்கிய வழக்கு விசாரணைக்கு வந்தது. சென்னை முன்னாள் கமிஷனர் அருண் ஐபிஎஸ் பிறப்பித்த குண்டாஸ் தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட உணராமல், தேவையற்ற காரணங்களுக்காக குண்டாஸ் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், 28 ஆண்டுகள் அனுபவமிக்க ஓர் அதிகாரி சட்டத்தை இவ்வாறு கையாளக் கூடாது என்றும், யூடியூபர் சவுக்கு சங்கர், வாராகி உள்ளிட்ட பலர் மீது அருண் ஐபிஎஸ் கமிஷனராக இருந்தபோது பாய்ந்த குண்டாஸ் சட்டங்கள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் நீதிபதிகள் நினைவு கூர்ந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதவி என்பது சி.வி.நரசிம்மன், சி.எல்.ராமகிருஷ்ணன் போன்ற நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அதிகாரிகளால் அலங்கரிக்கப்பட்டது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தத் துறையின் தலைவராக இருப்பவர் எவ்வித அசிங்கமான விமர்சனங்களுக்கும் இடமளிக்காதவராக இருக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில் மிகக் காட்டமாகப் பதிவு செய்தார். நீதிமன்றப் பிரதியைக் கொண்டு சென்ற ஊழியரை காத்திருக்க வைத்த விவகாரத்திலும் நீதிமன்றத்தின் கடும் கோபத்திற்கு அருண் ஐபிஎஸ் ஆளாகியிருந்தார். இதனால் அருணை நீதிபதி காக்க வைத்து தண்டனை வழங்கினார். புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் சி.மகேஸ்வரி ஐபிஎஸ் யார்? நீதிமன்றத்தின் இந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு, அத்துறையின் புதிய தலைவராக ஐஜி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான சி.மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். காவல்துறை மீது இருந்த ஆர்வத்தால், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதி, 1997ஆம் ஆண்டு நேரடியாகத் துணைக் காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். காவல்துறையில் அவரது சிறப்பான பணிக்காக 2003-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும, 2006-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் இணை ஆணையராக சட்டம்-ஒழுங்கைத் திறம்படக் கையாண்டவர். சேலம் சரக டிஐஜியாகவும் சிறப்பாகப் பணியாற்றினார். கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்லை மாநகரத்தின் வரலாற்றிலேயே முதல் பெண் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு சாதனை படைத்தார். இவரது நேர்மையான மற்றும் திறமையான சேவையைப் பாராட்டி, தமிழக அரசின் 'முதலமைச்சர் அண்ணா பதக்கம்' (2016) மற்றும் மத்திய அரசின் 'குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்' (2019) ஆகிய உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் ஐஜியாக இருந்த மகேஸ்வரி, தற்போது ஒட்டுமொத்த லஞ்ச ஒழிப்பு அமைப்பையும் வழிநடத்தும் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment