by Vignesh Perumal on | 2025-12-03 09:28 PM
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு காரணமாகப் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 3, 2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே, தீபம் ஏற்றச் சென்ற இந்து அமைப்பினருக்கு 144 தடை உத்தரவு காரணமாக மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக, மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பினர், 50 சி.ஐ.எஸ்.எஃப். (CISF) படை வீரர்களைக் கூட்டிக்கொண்டு மலைப் பகுதிக்குப் புறப்பட்டனர்.
ஆனால், சிஐஎஸ்எஃப் படையினருடன் வந்த இந்து அமைப்பினருக்குத் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாலும்,
திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், அனுமதி வழங்க முடியாது என காவல் ஆணையர் லோகநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவால் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தது.
தலைமை நீதிபதியின் அனுமதியுடன், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ஆர். ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இந்த முறையீடு செய்யப்பட்டது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் தலைமையில் அரசு வழக்கறிஞர்கள் ஆன்லைன் மூலமாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகி முறையீடு செய்தனர்.
மத்தியப் படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அரசு இந்த அவசர முறையீட்டை மேற்கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தியதாலும், தடுப்புகளை உடைத்துச் சென்றதாலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, திருப்பரங்குன்றத்தில் கூட்டம் கூடத் தடை விதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாடு அரசின் அவசர முறையீடு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்