by Vignesh Perumal on | 2025-12-03 09:12 PM
திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படும் நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்து முன்னணி கட்சியினரின் நடவடிக்கையால் பெரும் பரபரப்பும் அசாதாரண சூழலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீட்டர் தொலைவில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆண்டாண்டு காலமாக அங்கு தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நிறுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் இன்று (டிசம்பர் 3) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்துத் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சந்திரசேகர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை எனத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார்.
இதை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகிய இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக மாலை 5 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டார்.
அப்போது அரசுத் தரப்பில் முன்கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அதனைக் குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி வழக்கை 6.05 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, பாரம்பரியத்தின்படி திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களைக் கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவு குறித்துத் தகவல் கிடைத்தவுடன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி அங்குத் திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு மலை மீது ஏறிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்புகளைத் தகர்த்து மலை மீது ஏறிய இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மலையில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக, திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாக, நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக அறிவித்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்