by Vignesh Perumal on | 2025-12-03 01:39 PM
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீநகர் காலனி செந்தில்நாதன் நகரில் புதிதாகப் போடப்பட்ட ஒரு சாலையில் திடீரென ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உடனடித் தலையீட்டிற்குப் பிறகு ஆளுங்கட்சியின் ஆய்வு மின்னல் வேகத்தில் நடைபெற்று, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஆளுங்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் முக்கிய விஐபிக்கள் வசிக்கும் பகுதியான ஸ்ரீநகர் காலனி செந்தில்நாதன் நகரில், கடந்த மாதம் புதிதாகத் தார் சாலை போடப்பட்டிருந்தது. ஆனால், அந்தச் சாலையில் திடீரென 20 அடி சுற்றளவில், 3 அடி ஆழத்தில் ஒரு ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது.
இந்த ராட்சதப் பள்ளம் காரணமாக அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தரமற்ற சாலைப் பணிகளைக் கண்டு மக்கள் வேதனை அடைந்ததுடன், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் ஆளும் திமுக அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டிவந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் வினோத்ரவி தகவல் அறிந்து உடனடியாக நேற்று (டிசம்பர் 2, 2025) சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
பள்ளத்தின் ஆபத்தை உணர்ந்த அவர், கழக நிர்வாகிகளுடன் இணைந்து உடனடியாக மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜிடம் நேரில் மனு அளித்தார். "மாநகராட்சியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன; மக்கள் அச்சத்தில் இருக்கும் இந்த ராட்சதப் பள்ளத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்," என்று வினோத் ரவி தலைமையில் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.
தவெகவினர் மனு அளித்ததைத் தொடர்ந்து, இன்று (டிசம்பர் 3, 2025) காலையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக) மற்றும் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அவசர ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எம்.எல்.ஏ. அன்பழகன் பார்வையிட்ட உடனேயே, பள்ளத்தைச் சீரமைக்கும் பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மின்னல் வேகத்தில் உடனடியாகத் தொடங்கப்பட்டது ஆகும்.
தவெக மனு அளித்தபோது அசராமல் இருந்த மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வந்தவுடன் துரிதமாகச் செயல்படத் தொடங்கியது, தரமற்ற சாலையைப் போட்டு "மாநகராட்சி ஆணையரை ஆட்டி வைக்கும் அந்த 'கருப்பு ஆடு' யார்?" என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக எழுப்பியுள்ளது.
தொடர்ச்சியாக உள்ளாட்சி நிர்வாகத்தின் குறைகளையும், தவறுகளையும் தவெகவினர் புகார் மனுக்கள் மற்றும் போராட்டங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், கும்பகோணம் மாநகராட்சியின் அலட்சியச் செயல்பாடுகளைத் தொகுதி மக்கள் அறிந்து வருகின்றனர். சாலை சீரமைப்பிற்கான தவெகவின் விரைவான கோரிக்கையும், அதனைத் தொடர்ந்த பணிகளின் தொடக்கமும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
"தமிழக வெற்றிக் கழகம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற 2026 தேர்தலில் வெறும் சவாலாக அல்லாமல், வெற்றி வாய்ப்புள்ள சக்தியாக அமையும்," எனப் பேசும் பொருளாகவே மாறியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்குக் குறைந்த மாதங்களே உள்ள நிலையில், எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் மீது மக்கள் அதிருப்தி கொள்ள வழிவகுக்கும் இந்த நிர்வாகத் தோல்விகளுக்குக் காரணமானவர்கள் யார் என்ற உட்கட்சி குழப்பம் நிலவுகிறதாம். அன்பழகன் ஆதரவாளர்கள், "எம்.எல்.ஏ.வின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் அந்தக் 'கருப்பு ஆடு' யார் எனக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என முணுமுணுத்து வருகின்றனர்.
"உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான மக்களின் இந்த அதிருப்தியை கட்சித் தலைமை சரி செய்யாவிட்டால், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியை 2026-ல் திமுக இழந்துவிடும்," எனச் சிலர் அரசியல் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தாமல், ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொகுதி மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. எது எப்படியோ? எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் தன் கவனத்தை மேற்கொண்டு அந்தக் 'கருப்பு ஆடு' மீது நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தஞ்சை மாவட்ட நிருபர் - அ. மகேஷ்.