by admin on | 2025-12-02 09:59 PM
துணை மேயர் வசிக்கும் தெருவிலேயே கழிவு நீர் வெள்ளம்! - கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலையில் பொதுமக்கள் அவதி, நோய் தொற்று அபாயம்!
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஆர்.ஆர். சாலைப் பகுதியில் உள்ள திமுக துணை மேயர் வசிக்கும் தெருவில் பல நாட்களாகக் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கும்பகோணத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான ஏ.ஆர்.ஆர். சாலையில் அமைந்துள்ள கவரைத்தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு காரணமாகவும், வடிகால் முறையாகச் செயல்படாததாலும் கழிவு நீர் குளம் போலத் தேங்கி நிற்கிறது. தெருவில் இரண்டு சக்கர வாகனங்கள். நான்கு சக்கர வாகனங்கள். மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள அசுத்தமான நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
சுகாதாரச் சீர்கேடு:
கழிவு நீர் தேங்கி நிற்பதால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுக்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் துணை மேயரே வசிக்கும் தெருவிலேயே இந்த நிலைமை நீடிப்பது, மற்ற தெருக்களின் சுகாதார நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், உள்ளாட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கை
உடனடியாக இந்தச் சுகாதாரச் சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அடைபட்ட சாக்கடைகளைத் தூர்வாரி, கழிவு நீர் சாலையில் தேங்காமல் வெளியேற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் அ, மகேஷ்
T. Mukt kamatchi evidence edit. 9842337244