by Vignesh Perumal on | 2025-12-02 03:47 PM
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வந்த நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குக் தமிழகப் பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.அந்த இடத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி, பழனி அறங்காவல் துறை இணை ஆணையர் (JC) தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்துள்ளனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துச் செய்தி சேகரிப்பதற்காக அங்குச் சென்றிருந்த பத்திரிகையாளர்களை, அறநிலையத் துறை ஊழியர்களுடன் வந்த தனியார் பாதுகாவலர்கள் (செக்யூரிட்டிகள்) கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இரண்டு பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டதாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் மீது பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைக் கண்டித்தும், பத்திரிகையாளர்களைத் தாக்கிய குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹரன் தலைமையில்காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழகப் பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: "சமுதாயத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளைப் பதிவு செய்வது பத்திரிகையாளர்களின் பணி. அவர்கள் யாருக்கும் ஒருதலைப்பட்சமானவர்கள் அல்ல. யார் தவறு செய்தாலும் அவர்கள் நிச்சயம் சுட்டிக்காட்டுவர். அப்படியான பணியில் ஈடுபட்டவர்களைத் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காம் தூணை அசைத்துப் பார்ப்பதற்கு ஈடான செயல். எனவே, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்"
என்று தமிழகப் பத்திரிகையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.!*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்*
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது பழனி திருக்கோயில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்திய பழனி திருக்கோயில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும்மென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நலச்சங்கம்.
செய்தியாளர் மோகன கணேஷ் திண்டுக்கல்.
நிர்வாக ஆசிரியர் விக்னேஷ் பெருமாள்
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்