by Vignesh Perumal on | 2025-12-01 11:57 AM
நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் மின்னணு முறையில் ஆவணங்களைத் தாக்கல் செய்யும் E-Filing (இ-தாக்கல்) முறையை இன்று (டிசம்பர் 1, 2025) முதல் கட்டாயமாக்கிச் சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
மின்னணு தாக்கல் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த இரண்டு மாதங்களாக இந்த முடிவு தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. தற்போது, கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மாண்புமிகு தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி (அறிவிக்கை எண். 265/2025), பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன:
"சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதித்துறையின் கீழ் உள்ள அனைத்து வகையான வழக்குகள், விண்ணப்பங்கள்/மனுக்கள், மனுக்கள் மற்றும் ஆவணங்களை கட்டாய மின்னணு தாக்கல் முறையில், [https://filing.ecourts.gov.in](https://filing.ecourts.gov.in) என்ற போர்ட்டல் மூலம் இன்று 01.12.2025 முதல் அமலுக்கு வரும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது."
மேலும், அறிவிக்கை எண். 265/2025-இல் உள்ள மற்ற அனைத்து வழிமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் நடைமுறை எளிமையாக்கப்படும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளில் கால தாமதம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்