by Vignesh Perumal on | 2025-11-29 05:49 PM
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குலத்தூப்பாளையத்தில், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள், வெள்ளிக்கிழமை அதிகாலை தலைமைக் காவலர் ஒருவரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது, அவர்களைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று கொள்ளையர்களும் காலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் அஷிப் (48), இர்பான் (45), மற்றும் ஆரிப் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மூவர் கும்பல், கோவையில் கவுண்டம்பாளையம் அரசு குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியில் இருந்தபோது, இந்த கும்பல் துணை ஆட்சியர் (DRO) குடியிருப்பு உட்பட 13 வீடுகளை குறிவைத்துத் திருடியுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களில், 56 சவரன் தங்கம், 250 கிராம் வெள்ளி மற்றும் ₹2 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பணி முடிந்து திரும்பிய அரசு அதிகாரிகள் தங்கள் வீடுகளில் கொள்ளை நடந்ததைக் கண்டு கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்தக் கும்பல் குனியமுத்தூரில் உள்ள குலத்தூப்பாளையத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
தனிப்படையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து, கொள்ளையர்களைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் தலைமைக் காவலர் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றனர்.
தற்காப்புக்காகவும், கொள்ளையர்களைப் பிடிக்கவும் அங்கிருந்த காவல்துறையினர் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மூன்று கொள்ளையர்களும் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!