by Vignesh Perumal on | 2025-11-29 01:27 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் அவர்கள், வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்டிருந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான அனுமதியை புதுச்சேரி காவல்துறை மறுத்துள்ளது.
அண்மையில் தனது கட்சியைத் தொடங்கிய விஜய், பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து ரோடு ஷோக்கள் நடத்தி வருகிறார். அந்த வரிசையில், புதுச்சேரி மாநிலத்திலும் டிசம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு ஷோ நடத்த தவெக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்கான அனுமதியைக் கோரி, கட்சியின் நிர்வாகிகள் புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரபூர்வமாக மனு அளித்திருந்தனர்.
தவெக அளித்த மனுவை ஆய்வு செய்த புதுச்சேரி காவல்துறை, அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் இந்த ரோடு ஷோவில், அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகப்படியான மக்கள் திரளும்போது, அண்மையில் தமிழகத்தின் கரூரில் நடந்த ரோடு ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அசம்பாவிதங்கள் அல்லது பாதுகாப்புக் குறைபாடுகள் புதுச்சேரியிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறை கருதுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கத்துடன், டிசம்பர் 5ஆம் தேதி நடக்கவிருந்த விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்து புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது, அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்