by Vignesh Perumal on | 2025-11-29 01:16 PM
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், பிரபல நடிகரும் பேச்சாளருமான சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டதை அடுத்து, அவரது மகனும் நடிகருமான கார்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (நவம்பர் 28, 2025) நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன்
ஆகியோருக்கு அவர்களின் வாழ்நாள் கலைச் சேவைக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார்.
தனது தந்தைக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம் குறித்து, நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:" அன்புடையீர், ஒரு நடிகராக பல தலைமுறைகளைக் கவர்ந்ததோடு, ஓவியக் கலை மீது கொண்ட பேராதரவும் அப்பாவின் வாழ்க்கையை தனித்துவமாக்கியது. கம்பன் என் காதலன்', 'திருக்குறள் 100', 'மகாபாரத உரை' போன்ற பெரும் இலக்கியங்களை மக்கள் மனங்களில் நவீனமாகப் பதிய வைத்த அவரின் பணி, தமிழ் மரபை பாதுகாக்கும் வாழ்நாள் அர்ப்பணிப்பு.
அப்பாவின் கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாகத் தமிழக முதலமைச்சர் கைகளால் அப்பாவுக்கு வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், எங்களுக்கும், கலை உலகிற்கும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றிகள்.
இந்த அங்கீகாரம், அவரது ஆழ்ந்த உழைப்புக்கும், கலை-இலக்கிய ஈடுபாடுக்கும் கிடைத்த உரிய மரியாதை.
ஒரு மகனாக நீங்கள் (சிவகுமார்) காட்டிய வழியில் நடப்பதை பெருமையாக உணர்கிறேன். இந்தத் தருணத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்ற திரு. குருஸ்வாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள்." இவ்வாறு கார்த்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சிவகுமாரின் கலை மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, அவருக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்துப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்