by Vignesh Perumal on | 2025-11-25 10:59 AM
தேனி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராம மக்களைச் சந்தித்துத் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மலை மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் கிராம மக்களைத் துன்புறுத்தும் வனத்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் காட்டமாக எச்சரித்தார்.
போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள், பாரம்பரியமாக நாட்டு மாடுகளை மேய்த்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் மாடுகளின் உணவுக்காக அருகிலுள்ள மலைப் பகுதிகளில் மாடு மேய்த்து வந்தனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் வனத்துறையினர் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி, மலைப் பகுதிகளில் மாடு மேய்ப்பதற்கு அனுமதி மறுத்துவருவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
தேனி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் வந்த நயினார் நாகேந்திரனை, கரட்டுப்பட்டி கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, மரத்தடி திண்ணைப் பிரசாரத்தில் அவர் பங்கேற்றார்.
மரத்தடி பிரசாரத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி, மாடு மேய்ப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்துக் கேட்டு அறிந்த நயினார் நாகேந்திரன், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது, தானும் மாடு வளர்ப்பவன் என்று குறிப்பிட்டு, மாடு மேய்ப்பவர்களைத் தடுக்கும் வனத்துறை மீது தனது கண்டனத்தைக் கடுமையாக வெளிப்படுத்தினார்.
"மலை மாடுகளை வனப்பகுதிக்கு உணவுக்காக மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அப்பாவிகளை மற்றும் கிராம மக்களை வனத்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் குடும்பமே பாதிக்கும் அளவிற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நமது தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வுடன் சேர்ந்து மலை மாடுகளை மேய்க்க இடையூறு செய்யும் வனத்துறையினரின் வேலையே போகும் அளவிற்கு அவர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்படும். நாளைக்கே நீங்கள் வனப்பகுதியில் மாடு மேய்க்கச் செல்லுங்கள். உங்களைத் தடுக்கும் வனத்துறையினரின் பெயரைக் கூறுங்கள். அவர்கள் குடும்பமே கஷ்டப்படும் அளவிற்கு நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும்," என்று அவர் எச்சரித்தார்.
மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வாழ்வாதாரத்திற்காக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.
மேலும் பேசிய அவர், "இன்னும் ஓரிரு மாதங்கள் தான் தி.மு.க. ஆட்சி. அதற்குப் பின்னர் நமது தோழமைக் கட்சியான அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். அதன் பின்பு நீங்கள் நிம்மதியாக வனப்பகுதியில் மாடு மேய்க்கலாம்," என்று கூறினார். இடையூறு ஏற்பட்டால் உடனடியாக அ.தி.மு.க. அல்லது பாரதிய ஜனதா கட்சியினருக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
பிரசாரம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் இரண்டு முக்கியக் கேள்விகள் கேட்கப்பட்டன:
சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) பத்திரிகையாளர் சந்திப்பில், "ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது" என்று கூறியது குறித்துக் கேட்டபோது, அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று கூறிச் சென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், கரட்டுப்பட்டி கிராம மக்களுடன் சேர்ந்து மாடு மேய்க்கச் சென்றபோது, சுமார் 58 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அரசு போட்ட வழக்கை அரசுதான் நீக்க வேண்டும். வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்கப் பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்" என்று மேலோட்டமாகக் கூறிச் சென்றார்.
கிராம மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட பிறகு நயினார் நாகேந்திரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்