by Vignesh Perumal on | 2025-11-23 03:02 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று (நவம்பர் 23, 2025) காஞ்சிபுரம் மாவட்டம், குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வுக்கு மட்டுமே நேரடிப் போட்டியாளர் தவெகதான் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்திருந்தது.
குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
கரூரில் நடந்த முந்தைய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தப் புதிய நடைமுறையாக, 'க்யூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ்' வைத்திருக்கும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி வளாகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசியதுடன், தவெக-வின் எதிர்கால வியூகத்தை வெளிப்படையாகப் பேசினார்.
"அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை நாம் போய் எதற்காக ஜெயிக்க வைக்க வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார். "இந்த முறை அ.தி.மு.க. தோல்வியடைந்தால், நாம் இரண்டாம் இடத்திற்கு வந்துவிடுவோம். அதன் பிறகு, தி.மு.க.வுக்கு நேரடிப் போட்டியாளர் நாம்தான்" என்று தெரிவித்தார்.
"நாம் தி.மு.க.வை மட்டுமே குறி வைப்போம். நமக்கு தி.மு.க.தான் இலக்கு" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். 'REPEAT MODE' மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜய் தனது அரசியல் இலக்கைத் தொண்டர்களிடம் அழுத்தமாகப் பதிய வைக்க விரும்பிய விஜய், "தவெகவுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி" என்ற வசனத்தை மேடையில் மூன்று முறை சத்தமாகச் சொல்ல வைத்து, தொண்டர்களையும் அதேபோலப் பின்னால் மூன்று முறை சத்தமாகச் சொல்லும்படி REPEAT MODE உத்தியைப் பயன்படுத்தினார். இது தொண்டர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியது.
தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் நம்மை நம்பினால் ஆட்சி மாற்றம் ஏற்படட்டும். இல்லாவிட்டால், எதிர்க்கட்சியாக இருப்போம்" என்று தெளிவுபடுத்தினார்.
விஜய் பேசிய இந்த அரசியல் வியூகங்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என்றும், எதிர்வரும் தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகளை மட்டுமே குறி வைக்கும் ஒரு வியூகத்தை தவெக வகுத்துள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்