by Vignesh Perumal on | 2025-11-11 11:46 AM
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணிடம், டேட்டிங் செயலி மூலம் பழகி காரில் கடத்திச் சென்று மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில், திண்டுக்கல் போலீஸ் DSP தங்கப்பாண்டியன் மகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், சமீபத்தில் பிரபலமான டேட்டிங் செயலியான 'பம்பிள்' (Bumble Dating App) மூலம் தனுஷ் என்ற நபருடன் பழகத் தொடங்கினார்.
தனுஷ், அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகி, ஒருநாள் வெளியே லாங் டிரைவ் செல்லலாம் என்று கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
காரில் சென்றபோது, தனுஷ் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை மிரட்டி, அவரிடமிருந்து ஒரு பவுன் மோதிரம், ஒரு பிரேஸ்லெட் மற்றும் ஒரு செயின் ஆகிய நகைகளைப் பறித்துக் கொண்டனர்.
மேலும், அவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கட்டாயப்படுத்திப் பெற்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளம்பெண்ணை மிரட்டிப் பணம் பறித்த அந்த நபர், திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) தங்கப்பாண்டியன் என்பவரின் மகன் தனுஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தனுஷைத் தீவிரமாகத் தேடி, அவரை கைது செய்தனர்.
கைதான தனுஷ் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தனுஷ், கோவையில் உள்ள ஈச்சனாரி பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
வருமானத்தைப் பெருக்க, அவர் பம்பிள் உள்ளிட்ட பல்வேறு டேட்டிங் செயலிகள் மூலம் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை குறி வைத்துப் பழகி வந்துள்ளார்.
பெண்களைக் கவர, விதவிதமான, வசீகரமான புகைப்படங்களைத் தனது புரொஃபைல் படமாகப் பயன்படுத்தி உள்ளார்.
தன்னை கோவை அரசு வழக்கறிஞருக்கு உதவியாளராக இருப்பதாகவும், தனது தந்தை ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்றும் கூறி பெண்களை நம்ப வைத்துள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து, நைசாகப் பேசி லாங் டிரைவ் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். காரின் பின் சீட்டில் தனது கூட்டாளி ஒருவரை மறைத்து அழைத்துச் சென்று, சரியான சந்தர்ப்பத்தில் பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள், தங்களது குடும்ப சூழ்நிலை மற்றும் மானம் கருதி புகார் அளிக்காமல் இருந்ததால், தனுஷ் இந்த மோசடியை ஒரு முழு நேரத் தொழிலாகவே செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தனுஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, இவரால் பாதிக்கப்பட்டுப் புகார் அளிக்காமல் இருக்கும் மற்றப் பெண்கள் யார், யார்என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தனுஷுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலமான பழக்கவழக்கங்களில் பெண்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!
விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு...! 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை...! நீதிமன்றம் உத்தரவு..!