| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மேடையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த துணை முதல்வர்..! நெகிழ்ச்சி சம்பவம்...!

by Vignesh Perumal on | 2025-11-08 03:00 PM

Share:


மேடையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த துணை முதல்வர்..! நெகிழ்ச்சி சம்பவம்...!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற 'திமுக 75 அறிவுத் திருவிழா' தொடக்க நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும்போது, தனது மகன் மற்றும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினைப் பெருமையுடன் பாராட்டிப் பேசிய நிகழ்வு, அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
அப்போது, உணர்ச்சிவசப்பட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
திமுக இளைஞரணிச் செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அறிவுத் திருவிழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 8, 2025) காலை தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது, இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அறிவுத் திருவிழாவின் சிறப்பைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தனது மகனின் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் பெருமிதத்துடன் பேசினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில் இடம்பெற்ற முக்கிய வரிகள், "இந்த அறிவுத் திருவிழாவைப் பார்த்த பிறகு சொல்கிறேன், 'என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை' என்று சொல்வதைவிட, நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.
வள்ளுவர் கோட்டத்தில் நின்று சொல்கிறேன். தம்பி உதயநிதியின் கொள்கைப் பிடிப்புமிக்க செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அய்யன் வள்ளுவர் சொன்னாரே, 'மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் நோற்றான் கொல்எனும் சொல்!' என்ற குறளுக்கேற்ப அவர் செயல்படுகிறார் என்று பெருமையோடு சொல்கிறேன்."
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளுவரின் புகழ்பெற்ற குறளைக் குறிப்பிட்டு, தனது மகன் உதயநிதியை, 'கொள்கை இளவல்' என்று நெகிழ்ச்சியோடு பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டார். தந்தையின் பாராட்டைத் தாங்க முடியாமல், கண்கலங்கி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தொண்டர்கள் மத்தியில் உதயநிதியின் இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணம் பெரும் பேசுபொருளாக மாறியதுடன், அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75' என்ற 1120 பக்கங்கள் கொண்ட பிரமாண்ட நூலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள், பல்வேறு அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், இரு வண்ணக் கொடிக்கு வயது 75 என்ற தலைப்பிலான கருத்தரங்கமும் முற்போக்கு புத்தகக் காட்சியும் இவ்விழாவின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டன.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment