by Vignesh Perumal on | 2025-10-25 01:23 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி அருகே இருக்கும் பள்ளத்து கால்வாய் மலை கிராமத்திற்கான பிரதான சாலையில் காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பள்ளத்து கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுவது வழக்கம். இந்த யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைகின்றன.
இந்த நிலையில், பள்ளத்து கால்வாய் மலை கிராமத்தை பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று முகாமிட்டு சுற்றித் திரிவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சாலையில் யானை நிற்பதால், அந்தப் பிரதான சாலை வழியாகப் பயணிக்க வேண்டிய பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
முக்கியமாக, இரவு நேரங்களில் இந்தச் சாலையில் யானை உலா வருவதால், யாரும் தனியாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விளைநிலங்களை ஒட்டியுள்ள பகுதியாகவும், யானைகளின் வழித்தடமாகவும் இப்பகுதி உள்ளதால், சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை உடனடியாக வனத்துறையினர் கண்காணித்து, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளத்து கால்வாய் மற்றும் தாண்டிக்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க, இரவு நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க துணை இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகள் சங்கம்..!!! கோரிக்கை
ஸ்ரீகாகுளம் கோயில் கூட்ட நெரிசல்...! 9 பேர் பலி...! பிரதமர் மோடி இரங்கல்...!
கொடூர சம்பவம்....! கூட்ட நெரிசல்...! ஏகாதசி தரிசனத்தில் 9 பேர் பலி...!
V O C நினைவு நாள் பேச்சு போட்டி
உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்ட மூலம் பட்டா வழங்கல்..!!!