by Vignesh Perumal on | 2025-10-24 12:32 PM
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இரு மாநில முதல்வர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, கர்னூல் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதால், பேருந்தில் உடனடியாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். திடீரெனத் தீ மளமளவெனப் பேருந்து முழுவதும் பரவியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, பேருந்தின் அவசர கால கதவு வழியாகக் குதித்துத் தப்பியுள்ளனர்.
இருப்பினும், தீயில் சிக்கி சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீக்காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், "பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அரசு அதிகாரிகள் வழங்குவார்கள்" என்று உறுதி அளித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேச முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஹெல்ப்லைனை நிறுவவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்தத் தொடர் விபத்துச் சம்பவமானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மக்களே உஷார்....! 'மோந்தா' புயல்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
விளம்பர ஜாம்பவான் பியூஷ் பாண்டே காலமானார்...!
15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..! குடியரசுத் தலைவர் இரங்கல்...!
கோரவிபத்து...! ஆம்னி பேருந்தில் பயங்கர தீவிபத்து..! 15 பேர் பலி..! 20க்கும் மேற்பட்டோர் காயம்..!
பசுமை பழனிக்காக மலைப்பகுதியில் அதிகாரிகள் செய்த செயல்...! மக்கள் வரவேற்பு....!