by Vignesh Perumal on | 2025-10-22 12:12 PM
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ஆர். சக்கரபாணி அவர்கள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டைவிட வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நெல் விளைச்சல் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு குறுவை நெல் கொள்முதல் செப்டம்பர் 1-ம் தேதியே தொடங்கப்பட்டது. இதுவரை 1728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 7.02 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 97,125 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 3.92 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும்.
நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1606.65 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
1,250 மூட்டைகள் கொண்ட தினசரி 35,000 மெட்ரிக் டன் நெல் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லைத் தேங்க விடாமல் துரிதமாக அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதலுக்காகத் தேவையான 61 லட்சம் சாக்கு பைகள் (மொத்தம் 2.65 கோடி சாக்குகள் தேவை) கையிருப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. சாக்குப் பைகள் பற்றாக்குறை இல்லை.
நெல்லுக்கான ஆதார விலை (குறைந்தபட்ச ஆதரவு விலை) மத்திய அரசு உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசும் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. நெல் கொள்முதல் பணிகளைத் துரிதப்படுத்தவும், விவசாயிகளின் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், தலைமை அலுவலகத்திலிருந்து பொது மேலாளர் தலைமையில் 9 குழுக்களும், மண்டல மேலாளர்கள் தலைமையில் 12 குழுக்களும் என மொத்தம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைத் தூற்றி, மூட்டைகளில் பிடித்து, அடுக்கிக் கொண்டு, லாரிகளில் ஏற்றுவதற்கு வழங்கப்படும் கூலி (சுமை தூக்குவோர்) ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்றிருந்ததை ரூ.10 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாகுபடி பரப்பு மற்றும் கொள்முதல் அளவு அதிகரித்துள்ள நிலையில், நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்கவும், விவசாயிகளுக்குப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்கவும் அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்