by Vignesh Perumal on | 2025-10-21 11:51 AM
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இன்று (அக். 21) மூன்றாவது நாளாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி, மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் கல்லாறு மற்றும் ஹில்குரோவ் உள்ளிட்ட இரண்டு இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டு, ராட்சதப் பாறைகள் ரயில் தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ளன.
பாறைகள் மற்றும் மண் சரிவால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததோடு, ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் மேட்டுப்பாளையம் - உதகை மற்றும் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான அனைத்து மலை ரயில் சேவைகளும் இன்று மூன்றாவது நாளாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்குப் பயணச் சீட்டுக்கான முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படுகிறது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் ராட்சதப் பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து, அவற்றை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், அதுவரை பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்