by Vignesh Perumal on | 2025-10-21 11:23 AM
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று (அக். 21) கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (அக். 21) சில மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை (12 செ.மீ முதல் 20 செ.மீ வரை) பெய்ய வாய்ப்புள்ளதால், பின்வரும் 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதாவது, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களைத் தவிர, பின்வரும் 15 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை (6 செ.மீ முதல் 12 செ.மீ வரை) பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், நீர் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வானிலைத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று முதல் (அக். 21) வரும் சில தினங்களுக்குத் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்