by Vignesh Perumal on | 2025-10-21 10:55 AM
திண்டுக்கல் மாவட்டம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா, நாளை புதன்கிழமை (அக்டோபர் 22, 2025) காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
முதல் நாள் (அக். 22 (புதன்) உச்சிக்கால பூஜைக்குப் பின், மூலவர் முருகப் பெருமான், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்குக் காப்புக் கட்டப்பட்டு, கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. அன்று முதல் தினமும் சாயரட்சை பூஜைக்குப் பின் தங்கச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக, மலைக் கோயிலில் உள்ள மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்ன குமாரசுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். வேல் வாங்கிய பின் சுவாமி அடிவாரம் எழுந்தருள்வார். அன்று மாலை கிரிவீதியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வில், சின்ன குமாரசுவாமி எழுந்தருளி அசுரர்களான தாரகாசூரன் (வடக்கு கிரிவீதி), பானுகோபன் (கிழக்கு), சிங்கமுகாசூரன் (தெற்கு), சூரபத்மன் (மேற்கு) ஆகியோரை வதம் செய்யும் வைபவம் நடைபெறும். சூரசம்ஹாரத்தை அடுத்து மறுநாள், முருகன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்குத் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்குத் திருக்கல்யாணம் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் சஷ்டி விரதத்தை நிறைவு செய்வர்.
விழா நாட்களில் முருகன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சமயச் சொற்பொழிவுகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் தீவிரமாகச் செய்து வருகிறது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் பல ஆயிரக்கணக்கில் மலையடிவாரத்தில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்