| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானல் விவசாயிகள் வேதனை...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்...!

by Vignesh Perumal on | 2025-10-19 12:10 PM

Share:


கொடைக்கானல் விவசாயிகள் வேதனை...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்...!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் மேல்மலைக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், அதிகரித்து வரும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை இழந்து வருவதாகவும், உணவுப் பயிர்கள் அழிவதால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதானத் தொழில். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்பாடற்ற வனவிலங்குகளின் நடமாட்டம் விவசாய நிலங்களை அழித்து வருகிறது.

விவசாயத்தின் முக்கிய ஆதாரமாக இருந்த உருளைக்கிழங்கு பயிரிடுவது, காட்டுப்பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாகப் பெருமளவு குறைந்து விட்டது. காட்டுப் பன்றிகள் கிழங்கு வகைப் பயிர்களை வேரோடு பிடுங்கிச் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பயிரிடுவதை நிறுத்திவிட்டனர்.

முட்டைகோஸ் மற்றும் பத்து வகையான பீன்ஸ் பயிர்களும் வனவிலங்குகளின் நாசத்தால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மருத்துவ குணம் கொண்டதும், புவிசார் குறியீடு பெற்றதுமான கொடைக்கானல் வெள்ளைப் பூண்டு விவசாயமும் தற்போது பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் நுழையும் குரங்குகள், மனிதர்களைப் போலப் பூண்டுகளைப் பிடுங்கிச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கஷ்டப்பட்டுப் பயிரிட்ட பூண்டுப் பயிரையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், மேல்மலைப் பகுதியான பூண்டியில் அருங்காட்டுக்குளம் என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று ஒரு மாட்டைத் தாக்கியதாகவும், உரிய சிகிச்சை அளித்தும் அந்த மாடு இறந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகளால் பயிர்கள் மற்றும் கால்நடைகள் சேதமடையும்போது, இழப்பீட்டுக்காக வனத்துறையிடம் முறையிடுவதும், அதற்கான நிவாரணம் கிடைப்பதும் எளிதல்ல என்றும், தாமதமாவதுடன், சரியான இழப்பீடும் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

வனவிலங்குகளுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு, உணவளிக்கும் விவசாயிகளுக்கு இல்லை என்றும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

வனவிலங்குகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால், விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால், மேல்மலையில் வேளாண்மை முழுமையாக அழிந்து, விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, இறுதியில் இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதே கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றனர்.


எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கத் தேவையான நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் கால்நடை இழப்புகளுக்கு உரிய, விரைவான இழப்பீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கொடைக்கானல் மேல்மலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment