by Vignesh Perumal on | 2025-10-19 11:15 AM
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. இந்த அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியவுடன், அணையின் பாதுகாப்பு கருதி முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது பொதுப்பணித் துறை நடைமுறையாகும்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குத் திறக்கப்படும் கூடுதல் நீரின் வரத்து மற்றும் வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு மலைகள், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இன்று (அக்டோபர் 19, 2025) காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியைத் தாண்டியதையடுத்து, அணைக்கு வரும் நீரின் அளவும், நீர் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேனி மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிர்வாகங்களுக்கும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றின் அருகே செல்லவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, உபரி நீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்