by Vignesh Perumal on | 2025-10-18 10:52 AM
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாகவும், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாகவும் மண் சரிவு ஏற்பட்டு, ஒரு வீடு சேதமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது வீடு கனமழையால் சேதமடைந்தது.
காந்திபுரத்தில் உள்ள கால்வாய் அருகே தற்போது தடுப்புச் சுவர் கட்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காகச் சமீபத்தில் தோண்டப்பட்டிருந்த நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக, கால்வாயின் ஓரத்தில் இருந்த மண் திடீரெனச் சரிந்து, குணசேகரனின் வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடைந்தது.
மண் சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக எவ்விதமான உயிர்ச் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கனமழை தொடர்ந்து பெய்யும் நிலையில், இதுபோன்ற கால்வாய் மற்றும் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குத் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டையும், மண்சரிவு ஏற்பட்ட பகுதியையும் ஆய்வு செய்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழையால் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுதல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்