by Vignesh Perumal on | 2025-10-18 10:39 AM
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வைகை ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து இருக்கும் வெள்ளிமலை, அரசரடி, மேகமலை மற்றும் வருசநாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை தொடங்கி விடிய விடியக் கனமழை பெய்தது.
இதனால் மூல வைகையாற்றில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, ஆற்று நீர் இரு கரைகளையும் தொட்டு வெள்ளமாகக் கரைபுரண்டு செல்கிறது. வைகை அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் பல ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
வருசநாடு - கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள வேளாண் நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த விளைபயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, தேனி வருசநாடு செல்லும் முக்கியச் சாலைகள் மற்றும் பல தரைப்பாலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ள நீரில் மெதுவாக ஊர்ந்து சென்றன.
மூல வைகையாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதன் காரணமாக, வருசநாடு, தும்மக்குண்டு, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆற்றை ஒட்டிய பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை நீடித்தால், வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் - மீனாட்சிசுந்தர்