by Vignesh Perumal on | 2025-10-17 05:05 PM
2025-2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காகக் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (அக்டோபர் 17, வெள்ளிக்கிழமை) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகச் சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார்.
தமிழகத்தில் நிலவிய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்தக் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தின்போது, மறைந்த முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அக்டோபர் 15 (புதன்கிழமை) முதல் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தொடரில் தினசரி காலை கேள்வி நேரம் நடந்தது. அதில் பல்வேறு துறைகள் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
கடைசி நாளான இன்று (அக்டோபர் 17), கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.
விவாதங்கள் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் முடிந்த பிறகு, சட்டப்பேரவைச் சபாநாயகர் மு. அப்பாவு அவர்கள், இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த நான்கு நாள் கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கியத் துறைகள் தொடர்பான 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்களின்படி, தமிழகச் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வழக்கம்போல, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் குழு....