by Vignesh Perumal on | 2025-10-17 04:38 PM
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை, தனது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்குச் சென்றார். அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்குப் பூங்கொத்து அளித்து, வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட தகவலில், இது முற்றிலும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ஓ.பி. ரவீந்திரநாத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் அவர்களை, மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (16.10.2025) சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்," என்று பதிவிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓ. பன்னீர்செல்வம், முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிரியர்கள் குழு.....