by Vignesh Perumal on | 2025-10-17 11:59 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் பல கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை கேரள சிறப்புக்pபுலனாய்வுக் குழு (SIT) இன்று (அக்டோபர் 17, 2025) அதிகாலை கைது செய்தது.
உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர், சபரிமலை கோயிலில் ஒரு காலத்தில் சபரிமலை துணை அர்ச்சகராகவும் (Junior Priest), பின்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரியின் உதவியாளராகவும் (தேவசம் வாரிய ஊழியர்) பணியாற்றியவர்.
தற்போது அவர் பெங்களூருவை மையமாகக் கொண்ட தொழிலதிபராக அறியப்படுகிறார். தங்க முலாம் பூசுதல் பணிக்கு இவரே முக்கியப் புரவலராகச் (Sponsor) செயல்பட்டதால், இவரிடமே தங்கம் மாயமானதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக்கு வெளியே உள்ள துவாரபாலகர் (காவல் தெய்வம்) சிலைகளுக்கான தங்க முலாம் பூசப்பட்ட தாமிரக் கவசங்கள் பொலிவு இழந்ததால், அவற்றைச் சீரமைக்கும் பணி 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்தக் கவசங்கள் சீரமைப்பதற்காக, உன்னிகிருஷ்ணன் போற்றியின் பொறுப்பில் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கவசங்களின் அசல் எடை சுமார் 42.8 கிலோ இருந்த நிலையில், சீரமைக்கப்பட்டுத் திரும்ப வந்தபோது, 4 கிலோ முதல் 4.54 கிலோ வரையிலான தங்கம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கவசங்கள் சீரமைப்புக்காகச் சென்னைக்கு அனுப்பப்படுவதற்கு முன், உன்னிகிருஷ்ணன் போற்றியின் பொறுப்பில் சுமார் 40 நாட்களுக்கு மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில்தான் தங்கம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தேவசம் விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புக்pபுலனாய்வுக் குழு (SIT) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
SIT, உன்னிகிருஷ்ணன் போற்றி மீது சொத்துக்களை நேர்மையற்ற முறையில் கையாடல் செய்தல், குற்றவியல் நம்பிக்கை மோசடி மற்றும் மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் SIT குழுவினர் நேற்று (அக்டோபர் 16) 10 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், இன்று அதிகாலை 2:30 மணியளவில் உன்னிகிருஷ்ணன் போற்றியின் கைது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் விசாரணைக்காகக் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் தேவசம் வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்