by Vignesh Perumal on | 2025-10-15 04:45 PM
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியில் இயங்கி வந்த தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர், மையத்தின் காவலாளியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஒரு போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுமார் 35 பேர் நேற்று வெளியேற முயன்ற இவர்களை அங்கிருந்த காவலாளி தடுத்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த 35 பேரும் காவலாளியைத் தாக்கிவிட்டு, மறுவாழ்வு மையத்திலிருந்து ஒரே நேரத்தில் தப்பிச் சென்றனர்.
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து தகவலறிந்த மாங்காடு போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய 35 பேரையும் பிடிக்கும் பணியில் மாங்காடு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது கொடுமைகள் ஏதேனும் இருந்ததால் இவர்கள் தப்பினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மைய நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 35 பேர் தப்பி ஓடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்